நான் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வசித்தவன். தமுஎச, வாலிபர் சங்கம் மாற்றும் மார்க்சிஸ்டு கட்சியின் உறுப்பினராக இருந்தவன். திருப்பரங்குன்றம் கலை இலக்கிய இரவுகளுக்கு பல ஆண்டுகள் விடிய விடிய நிகழ்ச்சியில் பார்வையாளனாக பங்குகொண்டவன். நீங்கள் எங்கள் கிளைக்கு வந்து கட்சி வகுப்புகள் எடுத்திருக்கிறீர்கள். உங்களை பல கடந்த 22 ஆண்டுகளாக நான் அறிவேன். ஆனால் உங்களுக்கு என்னை போன்ற எளிய உறுப்பினர்களை நினைவில் வைத்திக்க வாய்பில்லை. நான் என் பொறியியல் பட்ட படிப்பை முடித்துவிட்டு 10 ஆண்டுகள் மென்பொருள் துறையில்
பணிபுரிந்துவிட்டு இப்பொழுது இந்த அபத்த வாழ்க்கை போதுமென சினிமா துறையில் உதவி இயக்குனராக இருக்கிறேன். முதலில் விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
காவல் கோட்டம் நாவல் வெளிவந்தது தமுஎகச தோழர்கள் மத்தியிலும் மார்க்சிஸ்டு கட்சியினர் மத்தியிலும் ஒரு பெரும் எதிர்பரப்பு இருந்தது. அந்த நாவல் மதுரையின் வரலாற்றை பற்றி பேசப்போகிறது, குற்றப்பரம்பரைச் சட்டத்தை பற்றி உண்மைகளை எடுத்துறைக்க போகிறது, அது தொடர்பான பல ஆவணங்களின் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது என பல வித தகவல்கள் அமைப்புக்குள் உலவிவந்தது. 10 ஆண்டுகள் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு நாவல், பெரிய WORK, மாஸ்டர் பீஸ் முதல் சமீபத்தில் Tamil Classic லேபிள் வரை நாளும் அதற்கு பல முலாம்கள் பூசி அதனை பிரம்மாண்டபடுத்த முயல்கிறீர்கள். இந்த தகுதிகள் எல்லாம் அதற்கு நிஜமாகவே இருக்கிறதா என்றும் முதல் நாவலுக்கே சாகித்ய அகாதமி வாங்கியது பற்றியும் தான் கடந்த ஒரு மாத காலமாக இலக்கிய சூழலில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த நான் மதுரையின் ரீகல் தியேட்டர் பற்றிய வரலாற்று குறிப்புகளை ஒரு நூலகத்தில் பார்த்தேன், அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பிரிட்டிஷ் காலம் தொடங்கி சுதந்திரம் பெற்ற இந்தியாவின் அரசியல் தலைவர்கள் வரை எண்ணற்றவர்கள் இந்த எட்வர்டு மன்றத்தில் வரலாற்று சிறப்பு
வாய்ந்த
இந்த தேசத்தின் நிகழ்வுகளை நடத்தியிருக்கிறார்கள். பொதுவாக இங்கு வைத்து வெள்ளைதுறைகளுக்கு சூட்டபட்ட மலர்கீரிடங்கள் பரிசளிக்கபட்ட வீரவாள்கள் பற்றி தனியே ஒரு கட்டுரையையே எழுதலாம். இந்த ஆவணங்களை படித்துவிட்டு அன்று மாலை எட்வர்டு மன்றம் நோக்கி வந்ததும் மிகவும் குழம்பிபோனேன். நான் அன்று மதியம்
படித்தது எல்லாம் இரவில் உண்மையிலேயே நடந்து கொண்டிருந்தது. ஒரு பிரதியை வாசிக்கும் போதே அதனுள் நாம் பயணிப்பது போல தான் இதுவும் நிகழ்ந்தது.
நீங்கள் மலர்கிரிடத்துடனும், வீரவாளுடனும் நிற்கும் காட்சியை முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தது அங்கிருந்து பயந்து வெளியே ஒடி நேதாஜி ரோடு பழைய புத்தக கடைகள் நோக்கி ஒடினேன். அங்கு இருந்த பழைய புத்தக கடை வைத்திருப்பவர் - என்ன சார் நீங்க விழாவுக்கு போகலயா என்றார், இல்லப்பா என்று மழுப்பி பதில் கூற முயன்றேன், ஆனால் அவர் முந்திக்கொண்டு சார் உங்களுக்கு தெரியாம இருக்குமா என்ன சார் இது ஒரு இலக்கிய திருட்டாமே என்றார். சார் இந்த I am Sam படத்த அப்படியே தமிழ்ல தெய்வதிருமகள்னு எடுத்தாங்கல சார் அது மாதிரிதான் சார் இதுவும் நம்ம ஆளுகளுக்கு எப்பவுமே ஒரிஜினல் எது டுப்ளிக்க்கெட் எதுன்னு தெரியாது சார். அவனுங்கள் டுப்ளிக்கேட்டுக்கே விழா வச்சு ஊர் ஊரா கொண்டாடுவானுங்க என்றார். ஆனால் சார் ஒரிஜினல் மாதிரியே ஏதோ இவனுங்களே கண்டுபிடிச்சா மாதிரியே டிவில பேட்டி எல்லாம் குடுக்குறானுங்க சகிக்கவே முடியலை சார் என்றார். நான் அதிர்ந்து போனேன், உனக்கும் தெரிஞ்சி போச்சா என்பது போல் புன்னகித்துவிட்டு அங்கிருந்து இடத்தை காலி செய்தேன்.
எதிரில் இருந்த ஹல்வா கடை வாசலில் ஏராளமான கட்சி தோழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு புகைத்துக் கொண்டு இருந்தார்கள். காலம் கெட்டு போச்சுயா, எப்படியா இத எல்லா கட்சியில அனுமதிக்கிராயிங்க, இது கட்சிக்கு நல்லதில்லப்பா என்பதாக பல வரிகள் என் காதில் விழுந்ததும் அங்கிருந்து கிளம்பினேன்.
10 ஆண்டுகள் கடும் உழைப்பு என்று தொடர்ந்து பல முறை இந்த நாவலை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு நாவலை எழுத உங்களுக்கு கட்சியே 5 ஆண்டுகள் விடுமுறை அளித்துள்ளது. நாவலை எழுத ஒரு இயக்கம் விடுமுறை அளிப்பதை கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளதே. நாவல் வெளிவந்ததும் அதனை புரட்ட தொங்கியபோது அதில் குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க கம்யூனிஸ்டுகள் போராடியது பற்றிய பல விபரங்கள் இருக்கும் என்று பெரும் ஆவலுடன் தான் நாவல் முழுவதும் பயணித்தேன், ஆனால் அப்படியான குறிப்புகள் என் கண்களில் பட வில்வேலை. நாவலின் வெளியிட்டு விழாவில் இதே சந்தைகத்தை மார்க்சிஸ்டு கட்சியின் பொது செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது உரையில் பதிவு செய்தார். பொதுவாகவே குற்றப்பரம்பரை சட்டம் தொடர்பான பல நூல்களின் இடதுசாரிகளின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யபடுவது இயல்பு தான். குற்றப்பரம்பரை பற்றி ஆய்வு செய்யும் பலரும் கூட முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பற்றி குறிப்பிடுவார்கள் ஆனால் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் பங்களிப்பு எப்பொழுதும் இருட்டடிப்பு செய்யபட்டே வருகிறது.
ஆனால் ஒரு இடதுசாரி, தன் கட்சியில் 10 ஆண்டுகள் விடுமுறை பெற்று அதே இடதுசாரிகளின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்கிறார் என்றால் இதன் அர்த்தம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை? இதை பற்றி பிற இடதுசாரிகளும் இதே குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கபட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும் கூட வாய் திறக்காமல் இருப்பது, விவாதிக்க மறுப்பது பல சந்தேகங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. பின்பு விசாரித்த போது தான் இந்த நாவலை 1310ல் தொடங்கி 1920ல் திட்டமிட்டு தான் முடித்தீர்கள், இதற்கு மேல் எழுதினால் இடதுசாரிகள் பற்றி எழுத வேண்டிவரும் என்பது தான் பிரச்சனை. ஆனால் இதுவரை தமிழகத்தில் மார்க்சிஸ்டு கட்சி இப்படி எத்தனை முழுநேர ஊழியர்களுக்கு நாவல் எழுத, கட்டுரை எழுத விடுமுறை அளித்துள்ளது, இனி அப்படி அது பிறருக்கும் விடுமுறை அளிக்கும் திட்டம் வைத்துள்ளதா என்பதை பற்றி பல சென்னையில் கட்சி தலைவர்களிடம் தகவல்கள் சேகரிக்க முயன்றேன், ஆனால் எல்லோரும் உதட்டை ஒன்றுபோலவே பிதுக்கினார்கள். அடுத்து சில இலக்கியவாதிகளிடம் தொலைபேசியில் அழைத்து இது ஒரு இலக்கியமாகும் தகுதி உள்ளதா என்று கேட்டேன். முதலில் நான் மிகவும் மதிக்கும் ஒரு நாவலாசிரியரிடம் கேட்டேன், அவர் சொன்னால் மிக சரியாக இருக்கும் என்று எனக்கு ஒரு அனுமானம். அவர் பளிச்சென - இது ஒரு ஆவணத் தொகுப்பு என்ற அந்தஸ்தை தான் பெரும், இது Literature ஆக மாறவில்லை இதனை ஒரு கிரியேட்டுவ் வொர்க் என்று ஏற்க இயலாது என்றார். சத்யநாத அய்யர், லூயிஸ் துமந்து, நெல்சனின் மதுரை ஆவணங்கள், தொ.பரமசிவத்தின் நூல்கள் என மலமலவென அவருக்கு தெரிந்த ஒரு பட்டியலை அடுக்கினார். இந்த ஆவணங்கள் கூட பலர் ஏற்கனவே தொகுத்ததுள்ளார்கள் என்றார்.
அது சரி என்று என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது, ஒருவர் நாயக்கர் காலம் பற்றி ஒருவர் எழுதக்கூடாதா? அந்த காலத்தை கொண்டாட கூடாதா? உடன் எனக்கு மனதுக்கு நெருக்கமான ஒரு வரலாற்று பேராசிரியர் வேங்கடராமன் அவர்களின் வீடு நோக்கி அடுத்த நாள் காலை சென்றேன். கட்சிகாரங்க வந்து இந்த புத்தகத்தை என் தலையிலும் கட்டிட்டாங்கப்பா என்று தொடங்கினார். நாயக்கர் காலத்தில் தான் மதுரை நகரத்திற்கு கோட்டை சுவரும் அகழிகையும் அமைக்கபட்டது. நாயக்கர்களின் ஒரே பிரச்சனை கள்ளர்கள்தான், கள்ளனுக்கு முதல் எதிரியே நாயக்கர் தான் என்று ஒரு பெரும் வரலாற்று உலாவுக்கே அழைத்து சென்றார். மதுரை வீரனை வைத்து கள்ளர்களை ஒடுக்க திட்டமிட்டார், ஆனால் அவன் பொம்மியை விரும்பியதும் பிரச்சனை வேறு பக்கம் போனது. மதுரை வீரனை நாயக்கர் தான் கொன்றார். இப்படியான உண்மையான வரலாறு முழுவதையும் இந்த நாவல் இருட்டடிப்பு செய்துள்ளது. 600 ஆண்டு வரலாறு முழுவதும் தலித நீக்கம் செய்யபட்டுள்ளது. இப்படியான இலக்கிய புரட்டுகளை மாறுகால் மாறுகை வாங்கக்கூடிய தமுஎகசவின் தலித்திய அறிஞர்கள் பலர் கள்ளமவுனம் காப்பது இன்னும் என் சந்தைகங்களை பலப்படுத்தியது.
மூவேந்திர் குல தேவர் சமூக வரலாறு புத்தகத்தின் 40 பக்கங்கள் அப்படியே நகலெடுக்கப்பட்டன என்றால் மிகை இல்லை என்றார் பேராசிரியர். அந்த நூல் இணையதளங்களிலும் SCRIBD-இலும் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அதில் தான் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சியில் பிரமலை நாட்டார்: சாதி கட்டுப்பாடு : சுதந்திர ஆட்சி: கள்ளன் பெரிதா? காப்பாளன் பெரிதா , மதுரை நகர் - ஆயிரம் வீட்டிடையர்களின் காப்பாளன் திருமலைபின்னத்தேவன், முதல் பின்னதேவர், மூக்கபரி தேவர், மூக்கபரி பெரியாண்டித் தேவர், அணைஞ்சித் தேவர் என பலரை பற்றிய முழு தகவல்கள் வலங்கைச் செம்புப்பட்டாவின் நகல் உள்பட அனைத்தும் கச்சிதமாக தொகுக்கபட்டுள்ளது என்று அவர் அதன் பிரதிகளை ஒப்பிட்டு காட்டினார்.
இந்த கிராமங்களுக்கு எல்லாம் 10 ஆண்டுகளாக சென்று மக்களிடம் பழகி அவர்களுடன் ஒரு நட்பை ஏற்படுத்தி கதைகளை, பண்பாட்டை, மூதாதையர்களின் வரலாறுகளை-வழக்காறுகளை, இது தொடர்பான ஆவணங்களை எல்லாம் சேகரித்து வைத்திருந்த ஒருவரின் வீட்டை தான் 10 வருடங்களாக சுற்றி சுற்றி வந்தீர்கள். ஆவணங்கள் இருந்த வீட்டை நீங்கள் கண்ணம் வைத்தது தான் இந்த 10 ஆண்டின் சாதனை என்றே பலர் கருதுகிறார்கள். அது எப்படி உங்களுக்கு தேவையானது எல்லாம் கிடைத்ததும் அந்த மனிதர்களை அப்படியே அந்த கனமே உங்கள் வழக்கமான பாணியில் கைகழுவினீர்கள்? மார்க்சிய பார்வையில் கள்ளர்களை பற்றி சுந்தரவந்தியத்தேவனின் எழுதியுள்ள பிறமலை கள்ளர் வாழ்வும் வரலாறு நூலையும் ஜாதியை விதந்தோதும் காவல் கோட்டத்தையும் ஒப்பிட்டு ஆய்வாளர்கள் தங்களின் பார்வைகளை முன்வைக்க வேண்டும், அதற்கு சில ஆய்வு மானவர்களை அவர் இதை தலைப்பாக கொண்டு எம்.பில் ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கீழக்குயில் குடியில் வாழ்ந்து வரும் ஹரிச்சந்திரன் வீட்டில் கிடையாய் கிடந்து அவர் தனது தொண்டை வரள, உதட்டு ஓரம் நுரை திரள கூறிய கதைகள் அனைத்தையும் பல மாதங்கள் சென்று 40 மணி நேரம் பதிவு செய்து, அந்த கதைகள் மட்டுமே எழுத்து படியில் 600 பக்கங்கள் வந்ததாக உங்களது நண்பர்கள் மூலம் அறிந்தேன். காவல் கூலி கேட்க போவது, திருடப் போகும் போது புதுப் பெண் தூக்கில் தொங்குவது, தலையை கல்லால் சிதைத்து ஆதாரத்தை அழிப்பது, அம்மி கொத்துபவனாக இருந்து ஊரையே கொள்ளையடிப்பது என் இது அனைத்தும் இந்த பெரியவரின் கதைகளே. அவர் இந்த கதைகளை பல ஆய்வாளர்களுக்கு சொல்லியபடி இருக்கிறார். இந்த கதைகளின் பல வடிவங்கள் மதுரை மாவட்டம் முழுவதும் முளைத்துகிடக்கிறது.அப்படியே காவல் கோட்டம் முழுவதும் கிளை கதைகளை விதைத்து விட்டீர்கள். அவரது குடும்பம் நூற்றாண்டுகளாக இந்த தொன்மத்தை சுமந்து வருகிறது. கிராமத்தில் வாழும் மனிதர்களின் அறிவை கபளீகரம் செய்வது தான் மார்க்சியமா. இந்த எளிய
மனிதர்கள்
தான் தங்களின் வாழ்கையை இந்த கதைகளை சுமந்ததற்காகவே தொலைத்து நிற்கிறார்கள். அவர் புதிய கதைகளை தேடி இந்த நிலம் முழுவதும் தனது புழுதியேறிய கால்களால் வாழ்நாள் எல்லாம் அலைந்துள்ளார். இவர்கள்தான் கிராம அறிவுஜீவிகள், இவர்களைத் தானே
அந்தோனியோ கிராம்சி Organic Intellectuals என்று குறிப்பிடுகிறார். நாவலுக்கு ஜீவனை தந்த இத்தனை கதைகளை சொன்னவருக்கு 1000 பக்கங்களில் Acknowledgement அச்சடிக்க இடம் இல்லாமல் எப்படி போனது. சமீபமான வந்த பதிப்புகளிலும் கூட அது இடம்பெறவில்லை. ஆனால் இது மொத்தமும் உங்கள் கண்டுபிடிப்பை போல காட்சிபடுத்துகிறீர்கள். மறுபுறம் கி.ராஜநாராயணன் அவர்களை பாருங்கள் அவர் தனக்கு கதையை கூறிவர்கள், அங்கே அழைத்து சென்றவர்கள், உதவி செய்தவர்களை எல்லாம் மிக விரிவாக தன் நூல்களில் குறிப்பிடுவார். அவர்களை எல்லாம் மெல்ல புத்தகங்களின் துணை ஆசிரியர்களாக உயர்த்தினார், இப்பொழுது அவர்களே படைப்பாளிகளாக தமிழ் சூழலில் வலம் வருகிறார்கள். இதுவல்லவா முன்னுதாரனம்.
முதல் மரியாதை படத்தில் தன்னை கொலை செய்பவனி கட்டை விரலை சாகும் தருணத்தில் ரஞ்சினி கடித்தபடி இறந்து போவார். இந்த ஒரு காட்சியை பாரதிராஜா தன் நாவலில் இருந்து அனுமதியின்றி எடுத்துவிட்டார் என்பதற்காக கி.ராஜநாராயணன் அவர்களை உடன் கெளரவித்து மண்ணிப்பு கேட்டு, பணத்தையும் வழங்கினார் இயக்குநர் பாரதிராஜா. ஆனால் ஹரிச்சந்திரன் கூறிய கதையை அப்படியே உங்கள் பெயரில் வெளியிட்டு, அதனை அரவாண் படமாக எடுக்கும் வசந்தபாலன் அவர்களின் மேல் பல பல பிரிவுகளின் கீழ் வழக்கு போடலாம். இது ஒரு வெளிநாட்டு கம்பேனி வந்து எளிய விவசாயிகளின் விதை நெல்லை திருடி அப்படியே தங்களின் பெயரில் பளபளக்கும் பாக்கெட்டுகளின் விற்பதற்கு சமமானது. இனி இந்த விவசாயி சென்று நான் ஏமாற்றப்பட்டேன் இது என் விதை நெல்ல என்று உரிமை கொள்ள இயலுமா, அப்படி உரிமை கொண்ட்டாடினால் இனி போலிஸ் அல்லது கம்பேனி அடியாட்கள் தான் அவர்
வீட்டுக்கு செல்வார்கள். திருட்டி டிவிடிக்களின் மூலம் எடுக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவை திருட்டு நாவல்கள் வைத்து எடுக்கப்படும் சினிமா என்ற பரிணாம வளர்ச்சிக்கு இந்த நாவல் அழைத்து சென்றுள்ளது. ஒரு திருட்டு பல திருட்டுகளுக்கு வழி வகுக்கிறது பாருங்கள்.
இரு தினங்களுக்கு முன்பு கோவையில் நடந்த கூட்டத்திலும் இதே கேள்வியை கோவை ஞானியும் உங்களிடம் முன்வைத்தார். அதற்கு நீங்கள் இது பற்றி தனியே ஒரு நூலை எழுத திட்டமிட்டுள்ளதாக பதிலளித்தீர்கள். ஒரு வழக்கின் சாட்சிகளை அந்த வழக்கில் தானே ஆஜர்படுத்த வேண்டும், இந்த வழக்கின் சாட்சிகளை அடுத்த வழக்கில் ஆஜர்படுத்த எந்த சட்டபிரிவும், நீதிபதியும் அனுமதிக்க மாட்டார்கள். எல்லாம் முடிந்த பிறகு நீங்கள் இனி அவர்களை அங்கீகரித்தால் கூட அது அவர்களை மீண்டும் கேவலப்படுத்துவதற்கு சமம் தான்.
அடுத்து 10000 பக்க ஆவணங்கள், 5000 பக்க ஆவணங்கள் காவல் கோட்டத்திற்காக திரட்டப்பட்டதாக மொழிபெயர்ப்பு செய்து பயண்படுத்தியதாக பேசப்படுகிறது . எத்தனை ஆயிரம் ஆவணங்கள் என்பதை நீங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்தும் பிரிட்டிஷ் காலத்து ரெக்கார்டுகளே என்பதை அனைவரும் அறிவார்கள், இந்த ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் தான் உள்ளது . இந்த ஆவணங்களை, வழக்கு தஸ்தாவேஜுகள் எல்லாம் உங்களுக்கு மொழியாக்கம் செய்து கொடுத்தது யார், யார்?? இந்த ஆயிரக்கணக்கான பக்கங்களை உங்களுக்கு மொழியாக்கம் செய்து கொடுத்தவர்களின் உழைப்பு மலைக்க வைக்கக்கூடியது தானே. அவர்களின் பலர் சமீபமாக நான் தான் அய்யா மொழியாக்கம் செய்து கொடுத்தேன் என்று புலம்பத் தொடங்கி விட்டார்கள், இல்லை நீங்களே தான் இவைகள் அனைத்தையும் மொழியாக்கம் செய்தீர்களா?? உங்களால் கம்யூனிஸ்டு கட்சியின் ஆங்கில அறிக்கையை கூட ஒரு பாரா வாசிக்க இயலாது என்று திருப்பரங்குன்றத்தை சேர்ந்த தோழர்கள் கூறினார்கள், மதுரை தீக்கதிரிலும் அதை விசாரித்து உறுதிபடுத்தினே. தோழா இதை நான் உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று கேளி செய்வதாக நீங்கள் நினைக்க கூடும் ஆனால் இது அப்படி மலிவான நோக்கத்திற்காக எழுதபட்டதில்லை மாறாக உண்மையில் உழைத்தவர்களை அடையாளம் காட்டவே எழுதப்படுகிறது.
உழைப்பை திருடுவது ஆகப் பெரிய திருட்டு இல்லையா. உழைப்பு திருட்டை விட அறிவு திருட்டு என்பது இன்னும் படுமோசமானதே. ஆவணங்கள் வெறும் 1000 பக்கமாக இருந்தால் கூட அது ஒரு படைப்புக்கு இணையான உழைப்புதானே, அவர்களிடம் எத்தனை ஆண்டுகள் லாவகமாக மொழியாக்கம் செய்து வாங்கிவிட்டு உங்கள் பாணியில் கழற்றிவிட்டீர்கள் பாருங்கள். இவர்களில் ஒருவருக்கு கூட ஒரு Acknowledgement இல்லாமல் எல்லா வெளிச்சத்தையும் உங்கள் தலை மீது விழும் படி போகஸ் லைட்டை அமைத்தீர்கள். காலம் காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அதனை அவர்களின் உரிமை என்று பெற்று தருவது தான் மார்க்சியம் என்று தான் நான் அறிந்தவரை கற்றிருக்கிறேன்.
சகல வெளிகளையும் அபகரிப்பது, சகலரின் நியாயமான வாய்ப்பை பறிப்பது அல்ல மார்க்சியம் என்று அந்த வரலாற்று பேராசிரியர் பல திசைகளில் என்னை அழைத்துச் சென்றார் தலைசுற்ற அங்கிருந்து வெளியேறிவந்தேன்.அடுத்து சில இலக்கியவாதிகள், தமுஎகச வை சேர்ந்த எழுத்தாளர்கள் அதுவெல்லாம் சரி ஜெயமோகனே பாராட்டி விட்டாரே என்றார்கள். உடன் என் நினைவு பல திசைகளில் சென்றது. தமுஎசவின் மாவட்ட மாநாடுகளில், கட்சியின் அரசியல் வகுப்புகளில் நீங்கள் ஜெயமோகனை இலக்கிய உலகின் நச்சு கிரிமி, ஹிந்துத்துவா வாதி, ஆர்.எஸ்.எஸ் காரன் என்ற அளவுக்கு மிக பயங்கர உரைகளை செய்துள்ளீர்கள். ஜெயமோகனை திட்டி கடுமையாக விமர்சித்து நீங்கள் எழுதிய கட்டுரை இன்றும் தின்னை இணையதளத்தில் ரத்த சாட்சியாக உள்ளது. ஜெயமோகன் - கோணங்கியை நீங்கள் வசை பொழிந்த அமைப்பின் அறிக்கைகளை நான் இன்னும் பத்திரமாக பெத்தானியாபுரம் வீட்டில் வைத்திருக்கிறேன். தமிழ் இலக்கியத்திலேயே இடதுசாரிகளை, இடதுசாரி அமைப்புகளை கேவலப்படுத்தி 1000 பக்க நாவல் எழுதிய ஜெயமோகனை எந்த கம்யூனிஸ்டாலும் மண்ணிக்கவே இயலாது. ஆனால் ஹிந்துத்துவா வாதி என அவரை நீங்கள் திட்டி அமைப்பில் நல்ல பொறுப்புகளை அடைந்துவிட்டு, காவல் கோட்ட பிரதிகளை கையில் எடுத்துக் கொண்டு நேராக நாகர்கோயில் சென்றீர்கள். அவர் அங்கு வலது கையில் ”மாமனாரின் இன்ப வெறி”படத்திற்கு வசனத்தை எழுதிக் கொண்டே நீங்கள் இடதுசாரி என்பதால் இடது கையால் காவல் கோட்டத்தை எடிட் செய்து கொடுத்தார். இந்த முரண்பாட்டை எப்படி வகைப்படுத்துவது. ஒரு இடதுசாரி தன் படைப்பை மாமனாரின் இன்ப வெறி வசனகர்த்தாவுக்கு எடிட் செய்ய குடுத்ததற்கான நியாயம் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின் எந்த பக்கத்தில் உள்ளது தோழா.
அது சரி ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் எப்பொழுது காம்ரேடாக மாறினார்? ஒரு ஆர்.எஸ்.எஸ் காரருடன் எப்படி இத்தனை நெருக்கமாக தன் படைப்பையே வழங்கும் அளவுக்கு மனதடைகள் இல்லாமல் இருக்கிறது என்று நான் கொஞ்சம் குழம்பி உங்கள் குருநாதர் அய்யா தமிழ்கூத்தனை தொலைபேசியில் அழைக்க முயன்றேன். மரணப்படுக்கையில் இருக்கும் அவரது தொலைபேசி எண்ணை எனக்கு அண்ணன் சிமான் உடன் குடுத்து உதவினார். அவர் மிக தெளிவாக சொன்னார் - வெங்கடேசன் தன் வீட்டில் வைத்து செங்கல் பூஜை செய்து அதனை அயோத்திக்கு அனுப்பினார். அவன நான் தான் அய்யா நல்வழிபடுத்தி கவித கிவிதனு கூட்டிட்டு வந்தேன். இந்த செங்கல் பூஜை பாசம் தான் இன்று உங்களை ஜெயமோகன் நோக்கி அழைத்துச் சென்றுள்ளதை இப்பொழுது விளங்கிக் கொள்ள முடிகிறது.
ஜெயமோகன் தமிழினி பதிப்பகத்தில் இருந்து வெளிவரும் படைப்புகள் அனைத்தையும் தொடர்ந்து பாராட்டியே எழுதுபவர். பொதுவாக தமிழினியில் இருந்து வெளிவரும் நூல்கள் அனைத்தையும் வசந்தகுமார் தான் எடிட் செய்வார், அதுவும் பல ஆண்டுகள் எடிட் செய்வார். இந்த நூல் மட்டும் எப்படி மாமனாரின் இன்ப வெறி வசனகர்தாவுக்கு குடுக்கபட்டது? வசந்தகுமார் தான் விரும்பியபடி இந்த நாவல் வெளிவரவில்லை என்று சென்னையில் பலரிடம் ஆதங்கப்படுள்ளார். இனி அடுத்த சில வருடங்களில் வெளிவரப் போகும் சு,வேனுகோபால், ஜெயமோகனின் நாவல்கள் அனைத்தும் நாயக்கர் காலத்தை பற்றியவையே. நாயக்கர் அமைப்புகளின் Funding ஏதும் இந்த நாவல் உருவாக்கங்களுக்கு பின்னுள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும், இல்லையெனில் இத்தனை படைப்பாளிகள் திடீரென நாயக்கர் மீது பாசம் பொழிவதை கொஞ்சம் சந்தைகித்து தான் ஆக வேண்டியது உள்ளது. கார்ல் மார்க்ஸ் அனைத்தையும் சந்தைகிக்க கற்றுக் கொடுத்துவிட்டார் தோழா.
ஒரு இளம் படைப்பாளிக்கு கொடுக்கபட்டுள்ளதே, அதற்காக நீங்கள் இந்த முயற்சியை பாராட்ட கூடாதா என்று ஒரு புதிய லாஜிக்குடன் ஒரு நாவலாசிரியர் என்னை அனுகினார். என்னடா புதுசு புதுசா கண்டுபிடிக்கிறீங்க என்று மனசு பம்மியது ஆனால் அவர் ஒரு மூத்த படைப்பாளி என்பதால் பதில் அளிக்காமல் மெளனமாக இருந்தேன். ஜோடி குரூஸ் எழுதிய ஆழி சூழ் உலகு நாவல் தமிழ் வாசக பரப்பையே மிக புதிய வெளிகளுக்கு அழைத்துச் சென்று பிரமிப்பை ஏற்படுத்தியது. எந்த வித விழாக்கள், சடங்குகள் இல்லாமலேயே அது பல பதிப்புகளுக்கு வாசகர்களின் கரம் பிடித்து மட்டுமே சென்றது. அவர் ஒரு இளம் படைப்பாளி இல்லையா. உங்களுக்கு கொஞ்சம் சைஸ் பெரிதாக வேண்டும என்றால் அவரது 1000 பக்க கொற்கையும் வெளிவந்துவிட்டதே. முஸ்லிம் மக்களின் வாழ்வை மிக புதிய சாரளத்தின் வழியே தனது எல்லா நாவல்களிலும் அறிமுக செய்கிறார் கீரணூர் ஜாகிர் ராஜா. அவர் தமிழ் மொழிக்கு மிக புதிய வெளியினை இதுவரை இலக்கியத்தின் பதிவு பெறாத ஒரு உலகையே அறிமுகம் செய்துள்ளார். அவர் இளம் படைப்பாளி இல்லையா?பிரச்சனை இவர்கள் ஒரு எழுத்தாளராக தங்கள் வேலையை முடித்துவிட்டு அடுத்த படைப்பை நோக்கி சென்றுவிடுவார். அவர்களுக்கு ஐ.எ.ஸ் தொடர்புகள் எல்லாம் கிடையாது, என்பதும் எந்த சித்து வேலைகளும் தெரியாது என்பதே எதார்த்த உண்மை.
இவைகளில் இருந்து நான் என் அனுபவத்தில் நான் அறிவது ஒன்றே சாகிதய் அகாதமி விருது உடனடியாக வாங்க வேண்டும் என்றால் இன்று இருக்கும் சுலபமான வழி ஒன்றே, உடனடியாக நீங்கள் தமுஎகச வின் ஏதேனும் ஒரு கிளையில் உறுப்பினர் ஆக வேண்டும், அடுத்து சில வருடங்களில் கட்சியிலும் உறுப்பினராக வேண்டும். முதலில் தான் இருக்கும் கிளையில் எவரும் எழுதிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து மாவட்ட குழுவிலும் கூட யாராவது படைப்பு கிடைப்புனு பேசினால் அவர்களை எல்லாம் சில ஆண்டுகளில் வெளியேற்ற வேண்டும். அமைப்பின் உறுப்பினர்களை எல்லாம் பேணர் ஒட்டுபவர்களாக, சவுக்கு நட குழி தேண்டுபவர்களாக மாற்ற வேண்டும். அவர்கள் அனைவரையும் வீடு வீடாக உண்டியல் அடிக்க செய்து அந்த பணத்தில் நீங்கள் உங்கள் கவிதை தொகுதியை பல வண்ணத்தில் அச்சடித்து அனைவரையும் மிரட்ட வேண்டும். அந்த கவிதை தொகுதியை பார்த்து தமிழ்செல்வனை போன்றவர்கள் ”வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம்” என்று விமர்சித்தால் கொஞ்சம் காலம் அவருடன் பேச்சை நிறுத்த வேண்டும். அந்த கால இடைவெளியில் அவருக்கும் குழி பறிக்க வேண்டும்.
இப்படியான வேலை பிரிவினை செய்து நம்மை சுற்றி இருப்பவர்களை எங்கேஜ் செய்து விட்டு எல்லா தளங்களிலும் டபுள் கேம் ஆடி கூட இருப்பவர்களை வெட்டிய குழியில் தள்ள வேண்டும். நமக்கு போட்டியாக வருபவர்கள் குறித்து அவர்களின் செயல்பாடுகள், நடத்தைகள், கொள்கைகள் குறித்து தொடர்ந்து அவதூறுகளை பரப்ப வேண்டும். அடுத்து அப்ப அப்ப அமைப்புக்கு தான் மட்டுமே விசுவாசமான ஆள் என்பதையும் தன்னை தவிற கம்யூனிஸ்டு கட்சியில் இருப்பவர்களை தலைமை சந்தைக்கிக்க்கும் படி புனைவுகளை உருவாக்க வேண்டும். தனக்கு எதிராக இவன் வரக்கூடும் என்று யாரை சந்தைகித்தாலும் அவனை கட்சி விரோதி என்று முத்திரைகுத்தி வெளியேற்ற வேண்டும். இவை எல்லாம் நடக்கும் போதே கட்சியின் பிரமுகர்களை எல்லாம் வளைத்து போட வேண்டும், தன்னை தவிற யார் சென்றாலுடன் அவர்கள் நன்கொடைகள் குடுக்காத படி சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். அமைப்பை மிரட்ட அப்ப அப்ப சில மூத்த ஆய்வாளர்களின் பக்கங்களை உருவி புத்தகம் போட வேண்டும். அதிகார மையங்களுடன் திறை மறைவான உறவுகளை பலப்படுத்த வேண்டும். அவர்கள் தனக்காக எதையும் செய்யும் அளவுக்கு அவர்களை கவர வேண்டும். உத்தப்புரம் சுவரை உடைப்போம் என்று ஒருபுறம் குரல் கொடுக்க வேண்டும், மறுபுறம் நீங்கள் தான் வீரர்கள் இந்த மண்ணை ஆட்சி செய்தவர்கள் என்று அந்த பகுதி ஆதிக்கசாதியினரை உசுப்பேற்ற வேண்டும். பகலில் சென்று கீரிப்பட்டி-பாப்பாபட்டி தேர்தலை நடத்தியே தீருவோம் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும் இரவில் வந்து கள்ளர்களின் வாழ்வை போற்றி வீரவரலாறு எழுத வேண்டும் களவை கொண்டாட வேண்டும். ஆனால் இந்த காரியங்களை எல்லா ஒருவர் கம்யூனிஸ்டாக இருந்து கொண்டு செய்ய இயலுமா. இது வெல்லாம் செய்தால் அடுத்து வருங்காலம் உங்களுக்கு உத்திரவாதமானது. பாவம் காலம் எல்லாம் இந்த அமைப்பில் இருந்த/இருக்கும் (காலமான) கே.முத்தையா, கு.சின்னப்பாரதி, டி.செல்வராஜ், (காலமான) கந்திர்வன், மேலான்மை பொன்னுச்சாமி, அருணண், செந்தில்நாதன், எஸ்.ஏ.பி, வேல.ராமமூர்த்தி, உதயசங்கர், கமலாலயன் என எவருக்கும் இந்த வழிமுறைகள் எல்லாம் தெரிந்திருக்கவில்லை. புனைவுகளை நம்பி செங்கல் பூஜை நடத்தியவரின் கையில் ஒரு இடதுசாரிகளின் படைப்பாளிகள் அமைப்பையே காவு குடுத்து நிற்கிறார்கள் நம் தோழர்கள் இந்த வருடம் விருது நாவலுக்கு தான் வழங்கப்பட்டிருக்கிறது படைப்பாளிக்கு அல்ல என்று சிலர் புதிய விளக்கங்கள் கொடுக்க முயன்று வருகிறார்கள். இதனை கேள்விபட்ட நான் தமுஎசவின் மாநில குழு உறுப்பினர்கள் 15 பேருக்கு தொலைபேசியில் அழைத்து எழுத்தாளர் மேலான்மை பொன்னுச்சாமி அவர்களின் எந்த நூலுக்கு விருது வழங்கப்பட்டது என்று கேட்டேன், ஒருவருக்கு கூட அது தெரிந்திருக்கவில்லை, மாறாக அவர்கள் அனைவரும் “இல்ல தோழர் அது மேலான்மை-க்கு தான் விருது குடுத்தாங்க” என்றார்கள்.
நாவலை முன் முடிவுகள் ஏதுமின்றி வாசிக்கிற யாரும் இவ்விருது தவறாக தரப்பட்டுள்ளதாக கூறவே மாட்டார்கள் என்று ஒரு வாதம் முன்வைக்கபடுகிறது. எனக்கு தெரிந்து எழுத்தாளர் தமிழ்செல்வன் அவர்கள் தினமும் 10 பேரையாவது எப்படியாவது படிச்சிருங்கப்பா என்று மன்றாடி வருகிறார். அதில் அவர் வாசிப்பவர்களுக்கு பல குறிப்புகள் வழங்கி வருகிறார். நாவல் வெளிவந்த காலத்தில் அவர் - நீங்கள் ஒரு 350 பக்கத்தை வாசிப்பது கடினம், அத விட்டுட்டு வாசியுங்கள் என்றார். அதில் ஒரு மாற்றம் இப்பொழுது நிகழ்ந்துள்ளது,சாகிதய் அகாதமி விருது பெற்ற பிறகு அவர் 250 பக்கங்கள் விட்டுட்டு வாசியுங்கள் என்கிறார். பெரும் கிளாசிக் என்று மார்தட்டும் ஒரு படைப்பை யாராவது அதில் ஒரு பாதியை கிழித்துவிட்டு வாசியுங்கள் என்று பரிந்துரைப்பதை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா.
மனுஷ்ய புத்திரன் கூறுவது போல - கண்ணதாசனுக்கு சேரமான் காதலி என்ற நாவலுக்காகவும், பாரதிதாசனுக்கு பிசிராந்தையார் என்ற நாடகத்திற்காவும் தி.ஜானகிராமனுக்கு சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காகவும் நாஞ்சில் நாடனுக்கு சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுப்பிற்காகவுந்தான் சாகித அகாதமி விருதுகள் வழங்கப்பட்டன. இந்தப் படைப்பாளிகள் தங்கள் மகத்தானபடைப்புகளை உருவாக்கியபோதெல்லாம் அவர்களை புறக்கணித்து விருதுகொடுக்கும்போது அவர்களுடைய மோசமான ஒரு படைப்பிற்கு கொடுத்து செருப்பாலடிப்பதுதான் சாகித்ய அகாதமியின் வழக்கம். .............சிற்பி போன்ற சில தனிநபர்கள் தமிழ் சாகித்ய அகாதமி விருதை பல ஆண்டுகளாக கையில் வைத்துக்கொண்டு தங்கள் வீடு தேடி வருபவர்களுக்கு இடும் பிச்சைச் சோறாக பயன்படுத்தி வருவதைப்பற்றியும் நாம் கொஞ்சம் கவலைப்படவேண்டிய நேரமிது.
ஏராளமான எழுத்தாளர்கள் தனி பேச்சில் மிக தரக்குறைவான வார்த்தைகளில் இந்த நாவலையும், அது எழுதப்பட்ட விதத்தையும், கேடு கெட்ட சாகித்ய அகாதமி கமிட்டியையும் வசைமாறி பொழிகிறார்கள். பலர் இது வெறும் ஆவணத் தொகுப்பு என்று கூறிவிட்டு மேடையில் சென்று பாராட்டுகிறார்கள். சிலர் இவன் ஆடும் ஆட்டம் சகிக்க முடியவில்லை தோழர் என்று ஊரெல்லாம் போன் செய்து கூறிவிட்டு மேடை தோறும் பாராட்டுகிறார்கள். பல படைப்பாளிகளின் இரட்டை நிலைபாட்டை என்னால் முதலில் புரிந்துகொள்ள முடியவில்லை, வெளிப்படையாக உங்கள் வருத்தத்தை பதிவு செய்ய வேண்டியது தானே என்று கூறியபோது சிலர் சொன்னார்கள் - எங்களுக்கு என்னிக்காவது சாகித்ய அகாதமி கெடைக்கும்னு ஒரு ஆசை இருக்கு அது தான் இப்ப பேசுனா அப்புறம் சுந்தர ராமசாமி மாதிரி கட்டம் கட்டிட்டாங்கன்னா என்றார்கள். இந்திய அரசே ஊழலில் புறையோடியிருக்கிறது, அதன் அத்தனை உறுப்புகளும் அழுகி நாற்றமெடுக்கிறது ஆனால் அது வழங்கும் விருதுக்கா இப்படி தங்கள் குரல்வலையையே விலைபேசுகிறார்கள் !! சிற்பி முதல் இந்த ஆண்டு தேர்வு குழுவினரின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் எல்லாம் ஆராயப்பட வேண்டும் என்று எழுத்தாளர்கள் இங்கு அணிதிரண்டிருக்க வேண்டாமா. சாகிதய அகாதமி தேர்வு குழுவுல் இருப்பவர்களே நாவலை வாசிக்கவில்லை என்பது கூடுதல் செய்தி.
நாவல் பைன்டிங்கில் இருந்து வெளிவரும் முன்பே ஆனந்த விகடனின் விருது வழங்கப்பட்டது. உடன் நான் அந்த பத்திரிக்கையில் பணியாற்றும் நண்பர் ஒருவரை அழைத்து பேசினேன், அவர் உடன் பாஸ்கர் சக்தி அவர்கள் நாவலை வாசித்து விட்டார் என்று என்னை சமாதானப்படுத்தினார்கள். தோழர் பாஸ்கர் சக்தி எனக்கு பிடித்தமான எழுத்தாளர், அவர் பெயரை இவர்கள் கூறியவுடன் நானும் அமைதியாக அதை ஒப்புக்கொண்டேன். இரு தினங்கள் (19.01.2012)முன்பு முகநூலில் ஞாநியின் சுவற்றில் பாஸ்கர் சக்தி ”காவல்கோட்டம் இன்னும் படிக்கவில்லை” என்று பதிவிட்டுருந்ததை
பார்த்து திடுக்கிட்டு போனேன்.
சமீபத்தில் மதுரையில் வைத்து வீரவாள், மலர்கிரீடத்துடன் நீங்கள் நிற்கும் காட்சியை புகைப்படமாக தெருக்களில் விற்க தொடங்கியுள்ளார்கள், இனி நாயக்கர்கள் பெருமாளுக்கு பதிலாக இந்த படத்தை தான் வணங்க இருப்பதாக நாயுடு சங்கமே தீர்மாணம் நிறைவேற்றியுள்ளதாமே. இனி கள்ளர்களுக்காக வரும் சித்தரை திருவிழாவில் அவர் திரி ஏந்தி தண்ணீர் பாய்ச்சி எதிர்சேவை செய்யும்காட்சியை படம் பிடிக்க இப்பவே காமிராக்கள் தயாராக உள்ளார்கள். ஒரு நாவலை எழுதி மக்களிடையே இத்தனை செல்வாக்கை தமிழ் இலக்கிய சரித்திரத்தில் யாரும் பெற்றதில்லை. அடுத்த விழாவில் அவரை பல்லக்கில் வைத்து மாசி வீதிகளில் சுற்றிவர இருப்பதாக தோழர்கள் சொன்னார்கள். டெல்லிக்கு நீங்கள் விருது வாங்க செல்லும் போது சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யபடும் என்றும் தோழர்கள் இப்பவே அதற்கான படிவங்களை தயார் செய்துவிட்டதாக நீட்டினார்கள். டெல்லியில் விருது வழங்கப்படும் நேரம் மதுரையில் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்தப்படுமாம். விருது பெற்ற பிறகு அசாம், குஜராத், காஷ்மீர் மாநிலங்களில் இருந்து எழுத்தாளர்கள் வந்து இதனை பாராட்டி பேசப் போவதாக நண்பர்கள் தெரிவித்தார்கள். அவங்க எல்லா எப்படி காவல் கோட்டத்தை படிச்சிட்டு வருவாங்க என்று கேட்டதற்கு இங்கயே நாங்க நாவல படிச்சவன தேடுறோம் கிடைக்கல, எல்லா வந்து பேசுறத பாத்தா தெரியலயா, அது தான் அங்க இருந்து வந்து பேசுனா கொஞ்சம் பில்டப் ஆக இருக்கல் என்றார். புத்தகம் எத்தனை பிரதிகள் விற்பனையாகி இருக்கு அதுவே தரத்திற்கு சான்று இல்லையா என்று எண்ணிக்கைகளை வைத்து சித்து விளையாட்டு காட்டினார் ஒருவர். இந்த ஆண்டு 1200, 2400, 3200,
6000, 8000 என பல எண்ணிக்கைகள் காற்றில் வீசப்படுக்கின்றன.மெல்ல பபாசி அலுவகம் நோக்கி சென்றேன் அவர்கள் சார் ஒரு நியுமராலஜி புக் 30,000 காப்பிஸ் போயிருக்கு, பொன்னியின் செல்வன் 15,000 காப்பிஸ், வாஸ்து புக் நல்ல ஆத்தார் அது ஒரு லட்சம் காப்பிஸ் என்றார். எண்ணிக்கையை வைத்து ஒரு பிரதியின் அந்தஸ்தை தீர்மானிக்கலாமா. ஊடகங்கள் தொடர்ந்து promote செய்யும் நூல்கள் விற்கதானே செய்யும், அது ஒரு வகையில் வாசகர்களை வஞ்சிப்பதே. அவர்களின் அறியாமையை காசாக்கும் ஒரு செயலே.
புத்தக கண்காட்சியில் பலருக்கு இந்த ஆண்டு சாகிதய் அகாதமி விருது விலைக்கு வாங்கப்பட்டது அப்பட்டமாக தெரிந்திருந்தது. சிலர் கண்டித்தார்கள், சிலர் வருத்தப்பட்டார்கள். இடதுசாரிகளே இப்படி பணம் குடுத்து வாங்குவது நம்பிக்கை இழக்க செய்கிறது என்றார்கள். சாகிதய அகாதமி ஒன்றும் புனிதர்களால் நடத்தப்படும் அமைப்பு அல்ல் கடந்த பத்தாண்டுகளில் வருதை பலர் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். அப்படி விருது தகுதியை இழக்க போகும் போது நாஞ்சில் நாடனை போன்றவர்களுக்கு கொடுத்து அதை சரி செய்வார்கள். இந்த ஆண்டு விலையை மிக அதிகமாக ஏற்றிவிட்டீர்கள் என்பது வேறு சிலரது வருத்தமாக இருந்தது.
தோழா முதலில் இது நாவலா? நாவல் என்றால் இது வெறும் புனைவாக மட்டும் கருதப்பட வேண்டுமா, ஆனால் இதனை மதுரையின் வரலாறு என்றே பொதுவாக விளம்பரம் செய்கிறீர்கள். இதனை ஒரு reference ஆக இனி எடுத்து கொள்வார்களே, அதற்கு தகுதியான பிரதிதானா இது. இதனை மதுரையின் வரலாறு என்றே வியாபாரம் செய்கிறீர்கள், வரலாற்று நேர்மையுடன் தான் இந்த பிரதி அணுகப்பட்டுள்ளதா. இந்த பிரதி பிரதானமாக இரு சாதிகளைப் பற்றியே பேசுகிறது. இன்று சாதியை மார்க்சிய - பின்நவீனத்துவ நோக்கில் ஆய்வு செய்யும் எந்த ஆய்வாளனையும் அந்த சாதியினர் ஓட ஓட கல் எறிந்து விரட்டவே செய்வார்கள், ஏனெனில் இந்த பார்வையில் அமைந்துள்ள ஆய்வுகள் ஜாதிய பெருமைகள் பேசாது, ஜாதிகள் கட்டமைத்துள்ள பிம்பங்களை சிதைக்கும், அதன் விழுமியங்களை மறுநிர்மானம் செய்வதும் இத்தகைய ஆய்வுகளின் நோக்கம். ஆனால் உங்களுக்கு மதுரையில் இந்த சாதி சங்கங்களின் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரம் எல்லாம் நீங்கள் எந்த மாதிரியான பிரதியை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பதனையே பறைசாற்றுகிறது. புத்தக கண்காட்சியில் நாயக்கர்கள் பலரிடம் ”உங்களை பத்தி தான் எழுதியிருக்காரு வாங்கி படித்து பாருங்கள்” என்று பலர் ஒரு சாதிய Promotion செய்வதை பல முறை கேட்டிருக்கிறேன். நாயக்கர் கல்லூரியில் உங்களுக்கு பாசமாக விழா நடத்தப்பட்டதும், அது நீங்கள் பயின்ற கல்லூரி என்று விளக்கம் கொடுத்தார்கள் தோழர்கள். ஆனால் அந்த கல்லூரியின் தாளாளர் உங்களை செல்லமாக சின்ன முதலாளி என்று மார்க்சிஸ்டு கட்சிக்காரர்கள் முன்னனியில் அழைப்பதும் ரகசியம் அல்ல. ஒரு கம்யூனிஸ்டு தனது சொந்த சாதியை சேர்ந்த தலைவர்களுடன் நட்புறவு கொள்ள முடியுமா என்பதுவே அடிப்படை கேள்வி.
இதுவெல்லாம் இலக்கியம்,ஆனால் தோழர்கள் இதெல்லா சும்மா பிலிமுகாட்டுற வேல நாவலாவது கீவலாவது, அவன் எம்.பி சிட்ட குறிவச்சிதான் வேல செய்யுறான் என்று பகுதி குழு அலுவலகத்தில் பேசிக் கொள்கிறார்கள்.மதுர விருதுநகர் இரண்டில் எந்த தொகுதி கட்சிக்கு ஒதுக்குனாலும் இவன் தான் நிப்பானாம், மதுரையில விழா நடத்துறதே விக்ரமன், அண்ணாதுறை மாதிரி பல தோழர்கள மிரட்டுறதுக்கு தான் என்று மேலும் விளக்கினார். இதை எல்லா நிருபிக்கும் விதமாக நீங்களும் தோழர் மோகனை பற்றி மெல்ல பல கூட்டங்களில் பாச மழை பொழிய துவங்கிவிட்டீர்கள். ஒரு வேலை இவர்கள் பேசுவது உண்மையாக இருந்தால் இலக்கியத்தை இத்தனை மலிவான சுயலாப நோக்கத்திற்கு பயண்படுத்துவது சரியானது தானா. இதை என்னால் நம்ப முடியவில்லை ஆனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. உங்கள் எம்.எல்.எ கனவிற்காகவே திருப்பரங்குன்றத்தில் அற்புதமான இயங்கிய கட்சி இரண்டாக உடைந்தது, 40 ஆண்டுகள் கட்சிக்கா உழைத்த தோழர். கந்தசாமி அவர்களை வெளியே தள்ளினீர்கள். கொஞ்சம் பின்னோக்கி பாருங்களேன்.
செங்கல் பூஜையில் இருந்து உங்களை விடுவித்த அய்யா தமிழ்கூத்தனுக்கும் அவரது கவிஞர் பேரவைக்கும் குழியை வெட்டினீர்கள், அடுத்து நீங்கள் இல்லை என்றவுடன் திருப்பரங்குன்றம் தமுஎச கிளையை முடமான கிளையாக மாற்றினீர்கள், அடுத்து நீங்கள் இல்லாத செம்மலர் பத்திரிக்கை ஒரு சுத்த வேண்டு என்றீர்கள், உங்கள் அடியாட்களை தொடர்ந்து பல மாவட்ட செயலாளர்களாக அமர்த்தினீர்கள். உங்கள் ஆட்சிக்கு சிக்கல் வரக்கூடும் என வேல.ராம்மூர்த்தி, ஷாஜகான், முத்துக்கிருஷ்ணன் என எண்ணற்றவர்களை செருப்பால் அடித்து அமைப்பை விட்டு நீக்கினீர்கள். மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் தோழர். சி.ராமகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோருக்கு சமீபமாக குழியை வெட்டினீர்கள், தமுஎச மாநில மாநாடு நடத்தி கொடுத்தால் மாநில செயற்குழு பதவி என்று விதியை ஏற்படுத்திவிட்டு,
நீங்கள் உள்ளே சென்றதும் சாத்தூர் லட்சுமிகாந்தன் உட்பட பலருக்கு குழியை வெட்டினீர்கள், இப்படி உங்களை பற்றி இன்னும் அதிகம் அதிகம் பெருமைகளை என்னால் அடுக்கிக் கொண்டே போக உயலும். இது வெல்லாம் எதற்காக. ஒரு எம்.பி யாக மாறி எதை சாதிக்க போகிறீர்கள். ஏற்கனவே சுப்பிரமனிய சாமி மதுரையை சிங்கப்பூராக மாற்றியது போல நீங்கள் மதுரையை மாஸ்கோவாக மாற்றப் போகிறீர்களா?? உங்கள் கடந்த காலங்கள் குறித்து என்றைக்கும் வருத்தங்கள் இல்லை என்றால் அது ஆரோக்கியமானது அல்ல. மனிதன் தனது பரிணாமத்தில் நடக்கு தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்.
அமெரிக்காவில் IOWA பல்கலைக்கழகத்தில் இலக்கியம் பயிலும் எனது நண்பர் இந்த புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தார். அவர் இலக்கியத்தில் மோசடி தொடர்பான துறையில் ஆய்வு செய்ய இருப்பதாக கூறினார். Plagiarism in
Indian Literature என்ற தலைப்பில் இனி கொஞ்சம் வேலை செய்து ஒரு களத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றார். நான் உன், அடுத்து ஒரு சுருக்கமான வரைவை எழுதி அனுமதி பெற வேண்டும் என்றார். உன் தேடல் முடிந்துவிட்டது என்று அவனுடன் கண்காட்சியில் 6 ஸ்டால்களுக்கு சென்று புத்தகங்களை பரிந்துரை செய்தேன். தொ.பரமசிவம் அவர்களின் பண்பாட்டு அசைவுகள், அழகர்கோயில், அ.சிவசுப்பிரமணியனின் 5 நூல்கள், சத்தியநாத அய்யரின் History of the
Nayaks of Madura (R. Sathianathaier) , நெல்சனின் The Madura Country Manual -(James Henry Nelson)
, Edgar Thurston-னின் Castes and tribes
of Southern India, Madurai Gazetter, A South Indian subcaste: Social organization
and religion of the Pramalai Kallar- Louis Dumont, Madurai through the ages-
from the earliest times to 1801 A.D-D. Devakunjari,பி.முத்துத்தேவர் எழுதிய மூவேந்திர் குல தேவர் சமூக வரலாறு ஆகிய நூல்களுடன் காவல் கோட்டதின் ஒரு பிரதியையும் வாங்கி கொடுத்தேன். CT ACT ஆவணங்களும், ஹரிச்சந்திரன் அவர்கள் பேசி பதிவு செய்யபட்ட சிடிக்களும் அனுப்பியுள்ளேன். இத்துடன் இந்த நூல்களின் முதல் பதிப்பு வெளியான ஆண்டு பட்டியலையும் நேற்று அனுப்பியுள்ளேன். Tamil's first Plagiarism
Novel என காவல் கோட்டம் குறித்த அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வெளியாகவிருக்கும் ஆய்வு தமிழ் மொழிக்கு ஒரு பெரும் அந்தஸ்தை தேடித்தரும் என்று நான் நம்புகிறேன். ………….நன்றி
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
பெத்தானியாபுரம் முருகானந்தம்